வடக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட இடமாற்றத்தை ஏற்காத வடக்கு கல்வி அதிகாரிகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் பலரும் விசனமடைந்...
வடக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட இடமாற்றத்தை ஏற்காத வடக்கு கல்வி அதிகாரிகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் பலரும் விசனமடைந்துள்ளதாக அறியமுடிகிறது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் 13 கல்வி வலயங்களில் உள்ள கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு அவர்களின் சேவை நிபந்தனைகளின்படி வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நிலைய இடமாற்றங்கள் வழங்கப்பட்டன.
இந்த இடமாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநர், பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோரது அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டன.
சில கல்வி அதிகாரிகள் அதற்கு எதிராக மேன்முறையீடுகளைச் செய்தனர். அம்மேன்முறையீடுகளைப் பரிசீலனை செய்த கல்வி அமைச்சு சில திருத்தங்களைச் செய்து இடமாற்றங்களை உறுதி செய்தது.
ஆனால் சிலர் மேன்முறையீட்டிற்கு மேலதிகமாக இன்னும் மேன்முறையீடுகளை எழுதிக்கொண்டு தாம் கடமையாற்றிய அதே இடங்களில் நிதி, முகாமைத்துவ செயற்பாடுகளில் ஈடுபடுவதோடு செயலாளரின் பணிப்புரையை உதாசீனம் செய்து கடமையில் உள்ளனர்.
அதே வேளை ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம் வழங்கும் இக்கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களின் மேன்முறையீடுகளை கருத்தில் கொள்ளாது பாடசாலையில் கையொப்பமிடுவதை தடுப்பதும், அவர்களின் மாதாந்த வேதனத்தை நிறுத்துகின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றதோடு, அதிபர்களை இடமாற்றம் செய்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரித்தும் வருகின்றமை அதிபர், ஆசிரியர்களிடத்தே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழிகாட்டிகளாகச் செயற்படவேண்டிய கல்வி அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் பணிப்புரைகளை உதாசீனம் செய்வதும் மாறாக தமக்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் மீது அதிகாரத்திற்குப் புறம்பான கட்டளைகளைப் பிரயோகிப்பதும் எவ்வகையில் நியாயமானது என கல்விப்புலம் சார்ந்த அனைவரின் கேள்வியாக இருக்கிறது.
இந்த அதிகாரிகளின் இடமாற்றங்களை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் முறையாக நடைமுறைப்படுத்துவாரா? அல்லது இதற்கு முன்னைய காலங்களில் நடைபெற்றதுபோல கல்வி அமைச்சின் செயலாளர் இடமாற்றலாகிச் செல்வாரா? என்ற கேள்விகள் பலராலும் கேட்கப்படுகின்றன.