குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர், போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புபட்டவர், தேடப்படும் குற்றவாளிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் கிராமங்கள...
குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர், போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புபட்டவர், தேடப்படும் குற்றவாளிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் கிராமங்களில் பதுங்கி இருக்கலாம். அவ்வாறானவர்களை பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களால் கண்டுபிடிப்பது சிரமம் என தெரிவித்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், இவ்வாறானநிலையில் சமுதாய பொலிஸ் குழுக்கள் பொலிஸாருக்கு உதவவேண்டும் என தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் உருவாக்கப்பட்டுள்ள சமுதாய பொலிஸ் குழுக்களுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று(17) நடைபெற்றது.இதன்போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள 255 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சமுதாய பொலிஸ் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் உள்ள வாக்காளர் பதிவேட்டில் உள்ள பெயர்களுக்கு மேலதிகமாக யார் யார் கிராமத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர், போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புபட்டவர், தேடப்படும் குற்றவாளிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் கிராமங்களில் பதுங்கி இருக்கலாம். அவ்வாறானவர்களை பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களால் கண்டுபிடிப்பது சிரமம். ஆகவே அதன்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் பொலிஸாருக்கு உதவவேண்டும்.
30 வருட யுத்தம் காரணமாகவும் ஈஸ்டர் தாக்குதல் காரணமாகவும் பல்வேறு நெருக்கடி ஏற்பட்டது. அவ்வாறான ஒரு விடயத்தை இனிமேல் ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.
தென்மாகாணத்தில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அவ்வாறான ஒன்றை வடக்கிலும் அனுமதிக்க முடியாது.
பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் இவற்றை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
யுக்திய நடவடிக்கை மூலம் போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக கோஷ்டியினர் பலரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வடக்கில் உள்ளவர்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
119 அவசர பொலிஸ் தொலைபேசி அழைப்பு சேவையில் மொழி ரீதியான சிக்கல்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டனர். அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டலுக்கமைய107 என்கிற தமிழ் மொழில மூல அவசர பொலிஸ் தொலைபேசி அழைப்பு சேவை வவுனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
குறித்த 107 என்ற இலக்கத்திற்கு நாட்டின் எப்பாகத்தில் இருந்தும் தமிழ் மொழி மூலமான முறைப்பாட்டை மேற்கொள்ளமுடியும். -என்றார்.
இதன்போது பொலிஸ் மா அதிபர் விசேடமாக தமிழிலும் சிறிது நேரம் உரையாற்றினார்.