மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழ...
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு நாளை புதன்கிழமை (24) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை சாட்சியமளிப்பதற்காக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2017 ஜூலை 22ஆம் திகதி அப்போதைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழமைபோல நல்லூர் ஆலயப் பின்வீதி வழியாகக் காரில் சென்றார்.
மோட்டார் சைக்கிளிலும் காரிலும் மெய்ப்பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் மிகவும் குறுகிய தூர இடைவெளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மயிரிழையில் உயிர் தப்பித்தார்.
சூட்டுச் சம்பவத்தின்போது வயிற்றில் படுகாயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் தரத்திலானவரே உயிரிழந்தார்.
சம்பவத்தையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு எதிரான சுருக்கமுறையற்ற விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நிறைவடைந்த நிலையில் சட்டமா அதிபரினால் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான விசாரணையே நடைபெறவுள்ளது.