குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிகளுக்கிடையிலான நேற்றைய (04.04.2024) போட்டியில் பஞ்சாப் அணி தனது ...
குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிகளுக்கிடையிலான நேற்றைய (04.04.2024) போட்டியில் பஞ்சாப் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி நிர்ணயித்த 200 என்ற இலக்கை, பஞ்சாப் கிங்ஸ் அணி, ஒரு பந்து எஞ்சிய நிலையில் எட்டியுள்ளது.
முன் வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவற நடுவரிசை வீரராக களமிறங்கிய ஷஷாங்க் சிங் (Shashank Singh) 29 பந்துகளில் 61 ஓட்டங்களை குவித்து பஞ்சாப் அணியை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றார்.
ஏலத்தில் புறக்கணிப்பு
2023ஆம் ஆண்டில் நடைபெற்ற 17ஆவது ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஷஷாங்க் சிங் என்ற வீரரை தவறுதலாக பஞ்சாப் அணி வாங்கியிருந்தது.
வேறொரு வீரரை வாங்குவதற்காக ஏலம் கேட்ட பஞ்சாப் அணி, வீரரின் பெயரில் ஏற்பட்ட குழப்பத்தினால் தவறான புரிதலில் ஷஷாங்க் சிங்கை வாங்கியது.
உடனே தவறை புரிந்துக்கொண்ட பஞ்சாப் அணி நிர்வாகம், தனது முடிவை மாற்ற விரும்பிய போதும் அது அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், அதே ஷஷாங்க் சிங் நேற்றைய குஜராட் அணிக்கெதிரான போட்டியில் சரிவு நிலையில் இருந்த பஞ்சாப் அணியை மீட்டெடுத்து வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
அணியின் காப்பாளன்
ஏலத்தின் போது பஞ்சாப் அணி நிர்வாகத்தினரின் இந்த முடிவை ஏனைய அணியின் ரசிகர்கள் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டனர்.
ஆனால், இன்று ஷஷாங்க் சிங் தன்னையும் அணி நிர்வாகத்தினரையும் கிண்டல் செய்தவர்களை தூசியென தட்டியுள்ளார்.
அத்துடன், தவறான புரிதலில் வாங்கப்பட்ட வீரர் என்பதால் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஷஷாங்க் சிங்கை பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பதே உண்மை.
எனினும், முன்வரிசை வீரர்கள் அனைவரும் பிரகாசிக்காது பஞ்சாப் கிங்ஸ் அணியினை நேற்றைய போட்டியில் கைவிட்ட நிலையில், ஷஷாங்க் சிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார்.
தவறாக வாங்கப்பட்ட வீரர் என்ற மோசமான மனநிலையில் இருந்து, பஞ்சாப் அணியின் காப்பாளனாக மாறியிருக்கும் ஷஷாங்க் சிங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.