ICC இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் முக்கிய இரண்டு வீரர்களுக்கு அமெரிக்க விஸா கிடைக்காமை காரணமாக, அமெரிக்கா நோ...
ICC இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் முக்கிய இரண்டு வீரர்களுக்கு அமெரிக்க விஸா கிடைக்காமை காரணமாக, அமெரிக்கா நோக்கி இன்று (14) பயணித்த இலங்கை குழாமுடன் அவர்களினால் இணைந்து கொள்ள முடியவில்லை.
இலங்கை கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரர்களான குசல் மென்டீஸ் மற்றும் அசித்த பெர்ணான்டோ ஆகியோருக்கே அமெரிக்க விஸா கிடைக்கவில்லை என தெரிய வருகின்றது.
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி டுபாய் வழியாக நியூயார்க் நோக்கி இன்று (14) பயணித்தது.
குறித்த இரண்டு வீரர்களுக்கும் வெகுவிரைவில் விஸா கிடைக்கும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த இரண்டு வீரர்களுக்கும் சற்று தாமதமாக அமெரிக்கா நோக்கி பயணிக்க முடியும் என்பதுடன், விஸா தாமதத்தினால் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
எனினும், இந்த இரண்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு மாத்திரம் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்கள் எதையும் வெளியிடவில்லை.
ICC இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இலங்கை அணி பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.