பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கமலநாதன் விஜிந்தன் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். நாளை ...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கமலநாதன் விஜிந்தன் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
நாளை முல்லைத்தீவு எனும் அமைப்பை ஆரம்பித்து சமூக அபிவிருத்தி செயல்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் அபிவிருத்தி சங்கத் தலைவர் கமலநாதன் விஜிந்தன் அரசியல் லாபம் பெறும் நோக்கில் முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் வகையில், குறித்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் புகைப்படம் ,கொடி தமிழீழ எல்லைகளை குறிப்பிடும் வரைபடங்களை பதிவு செய்ததன் மூலம் நாட்டில் இனப்பிரச்சினை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தல் செயல்பாட்டை தூண்டும் வகையில் செயல்பட்டதன் மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் 19 ஆம் திதி கைது செய்யப்பட்டார்.
மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின்னர் , 21 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு கால வரையறையின்றி சிறைகாவலில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
25ம் திகதி இந்த வழக்கின் சந்தேக நபர் சார்பாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இன்று (26) நீதிமன்றத்தில் சந்தேகநபரான கமலநாதன் விஜிந்தன் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, கனிஷ்ட சட்டத்தரணிகளான பிருந்தா சந்திரகேஷ் மற்றும் தம்பிராஜா தயானந்தராஜா ஆகியோர் தமது வாதத்தை முன் வைத்ததனையடுத்து சந்தேகநபரான கமலநாதன் விஜிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் .