சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பான விசேட கலந்துரையாடல் கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தில் ஜீலை 30ம் திக...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பான விசேட கலந்துரையாடல் கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தில் ஜீலை 30ம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த விடயம் தொடர்பிலான கலந்துரையாடலுக்கு சுகாதார துறை சார்ந்த ஆறு அதிகாரிகளை பங்கேற்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் மஹிபால ,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல சம்பத் , வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் கோ.ரஜீவ் ஆகியோருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 05ம் திகதி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்ட நேரத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள்சார் பிரச்சனைகள் தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோருடன் கலந்துரையாடல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதன் அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டநிலையில்,அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமை அலுவலகத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.