சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதிக்கென தற்காலிகமாக வழங்கப்பட்ட மின்பிறப்பாக்கி தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா ஊடகங்களுக்கு...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதிக்கென தற்காலிகமாக வழங்கப்பட்ட மின்பிறப்பாக்கி தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா ஊடகங்களுக்கு தெரிவித்த குற்றச்சாட்டை வைத்திய அத்தியட்சகர் ரஜீவ் மறுத்துள்ளார்.
வைத்தியசாலையின் புதிய கட்டட பிரிவுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட மின் பிறப்பாக்கியின் மின் வலு வைத்தியசாலையின் தேவைப்பாட்டிற்கு போதாது எனவும்-தேவைப்பாடு எதைப்பற்றியும் சிந்திக்காது மேற்படி மின்பிறப்பாக்கி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் வைத்தியர் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியிருந்தார்.
இவ்வாறு வைத்தியர் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர்கள் வைத்திய அத்தியட்சகர் ரஜீவிடம் கேள்வி எழுப்பியபோது;
தற்போது கிடைக்கப்பெற்ற மின்பிறப்பாக்கி தற்காலிகமானது. மின்பொறியியலாளரின் சிபாரிசின் அடிப்படையில் தற்போதைய தேவைப்பாட்டிற்கு 150kb வலுவடைய மின்பிறப்பாக்கி போதும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே அது எடுத்து வரப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 9 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் புதிய கட்டட பிரிவின் சகல தேவைப்பாடுகளும் மேற்படி தற்காலிக மின்பிறப்பாக்கி ஊடாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்துவரும் மின் போதுமானதாக உள்ளது என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
மேற்படி தற்காலிக மின்பிறப்பாக்கியானது வைத்தியர் அர்ச்சுனா அவர்களின் சமூக ஊடக பதிவுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது ஏற்பாட்டில் வைத்தியசாலையின் தேவைப்பாட்டிற்காக வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.