ந.லோகதயாளன் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அதிக வாக்குப்பதிவுடன் அமைதியான முறையில் நடைபெற்றமை பாராட்டுக்குரியது என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்ந...
ந.லோகதயாளன்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அதிக வாக்குப்பதிவுடன் அமைதியான முறையில் நடைபெற்றமை பாராட்டுக்குரியது என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது.
இது தொடரபில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அண்மையில் நடந்து முடிவடைந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவதை திறம்பட அவதானித்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பாக, மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடாத்தியதற்காக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு (ECSL), இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய அனைத்து சேவை வழங்குநர்களையும் பாராட்டுகிறது.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பல அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 2022ல் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து உருவான (அரகலய) மக்கள் எழுச்சிக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் வேட்பாளர்களின் பிரச்சார நிதிகள் ஆராயப்படும் முதல் தேர்தலும் இதுவாகும். வரலாற்றில் முதன்முறையாக, ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகள் எண்ணப்பட வேண்டியிருந்ததும் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி (202) தேர்தல் கண்காணிப்பாளர்களை பிரச்சார நடவடிக்கைகளுக்காக அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கவும், மேலும் (47) கண்காணிப்பாளர்களை பிரச்சாரச் செலவுகளை முறைப்பாடு செய்யவும் நியமித்தது.
தேர்தலுக்கு முன்னதாக, TISL க்கு கிடைத்த மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,126 ஆக இருந்தது, அதில் சுமார் 650 முறைப்பாடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் (451) பொது மைதானங்கள், அரச அலுவலகங்கள், கட்டடங்கள் மற்றும் பாடசாலைகள் போன்ற பொது வளாகங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பானவை.
தேர்தல் நாள் கண்காணிப்பு நடவடிக்கைகளில், TISL நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட 244 கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பில் பங்கேற்றனர். தேர்தல் தொடர்பான கடுமையான வன்முறைச் சம்பவங்கள் அல்லது பாரிய அளவிலான தேர்தல் சட்ட மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை. எனினும், TISL கண்காணிப்பாளர்கள் தேர்தல் நாளில் தேர்தல் சட்டங்களை மீறிய 112 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை சிறியளவிலான சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை. சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களை காட்சிப்படுத்துதல் மற்றும் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற சட்ட விரோத செயல்கள் குறித்து காவல் துறை மற்றும் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்யும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
75% முதல் 80% வரையிலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது, இது இலங்கையின் ஜனநாயக செயற்பாட்டில் மக்கள் எவ்வளவு ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர் என்பதைக் காட்டும் ஒரு சிறந்த புள்ளிவிபரமாகும். ஒவ்வொரு பிரஜையும் வாக்களிப்பதன் மூலம் அடிப்படை ஜனநாயக உரிமையை நிலைநாட்டியதற்காகவும், தேர்தல் செயல்பாட்டின் போது அமைதியைப் பேணியமைக்காகவும் TISL நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான TISLஇன் கண்காணிப்பின் படி, நடந்து முடிவடைந்த 2024, ஜனாதிபதி தேர்தல் அமைதியாகவும் வன்முறையற்ற முறையிலும் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.