கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமக்கெதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் மேற்கொண்டவர்கள் தற்போது, ஏதாவது பிரச்சினையையோ அல்லது கட்டுக்கதைகளைய...
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமக்கெதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் மேற்கொண்டவர்கள் தற்போது, ஏதாவது பிரச்சினையையோ அல்லது கட்டுக்கதைகளையோ உருவாக்கி மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்து வருகிறார்கள். எங்கள் அரசாங்கம் 3 அல்லது 6 மாதங்களில் வீழ்ந்துவிடுமென கூறவும் தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் இந்த நாட்டை சீராக்கியே தீருவோமென்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
புத்தளத்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பல தொகுதிகளில் எமக்கு வெற்றியைப் பெற்றுத்தந்ததைப்போன்றே பொதுத்தேர்தலிலும் இந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவதை இந்த பெருந்திரளான மக்கள் கூட்டம் உறுதிசெய்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது பொதுவில் நிலவுகின்ற எதிர்ப்பினை முடிவுறுத்தி பாராளுமன்றத்தை துப்புரவாக்குகின்ற பாரிய சிரமதானத்திற்காக திசைகாட்டியிலிருந்து அதிகமான எண்ணிக்கைகொண்ட உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும். நாங்கள் அவ்வாறு கூறும்போது திசைகாட்டி வேட்பாளர்களின் முகங்கள்கூட தெரியாதென ஒருசிலர் கூறுகிறார்கள். எனினும் பலவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு முழுநாட்டிலுமே பிரபல்யமடைந்துள்ள குற்றச்செயல் புரிபவர்களுக்குப் பதிலாக இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திசைகாட்டியின் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை உருவாக்க செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உலகில் இருக்கின்ற மிகச்சிறிய அமைச்சரவையை முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகளை உணர்கிறீர்களா? அவ்வாறான குறைபாடு கிடையாது. ஒரு பட்டாசுகூட கொளுத்தாமல் வெற்றியைக் கொண்டாடியதன் மூலமாக வெளிப்படுத்திய எடுத்துக்காட்டினை இந்த பொதுத்தேர்தலிலும் தேர்தல் இயக்கத்தில் பாதுகாத்து வருகிறோம்.
பொருளாதார ரீதியாக, பாதுகாப்புரீதியாக, தொழில்முயற்சிகளை முன்னேற்றுகின்ற பக்கத்தில், பிள்ளைகளின் கல்விப் பக்கத்தில் போன்றே உழைக்கும் மக்களின் பக்கத்தில் அனைவரையும் பேணிப்பாதுகாக்கவேண்டியது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை நாங்கள் ஈடேற்றிக்கொண்டிருக்கிறோம்.
வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கப்படுகின்றது. அவ்வாறின்றேல் குறைநிரப்பு மதிப்பீடு மூலமாக சம்பந்தப்பட்ட செலவினை ஏற்பதற்கான அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பணத்தை ஒதுக்கியதாக முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார். அவர் ஒதுக்கியிராவிட்டாலும் எதிர்வரும் வரவுசெலவில் நாங்கள் அதற்கு அவசியமான நிதியை ஒதுக்கீடுசெய்வோம்.
முன்னாள் ஜனாதிபதி தோல்விகண்ட பின்னர் எம்மை அங்குமிங்கும் கிள்ளிக்கொண்டிருக்காமல் வீட்டில் இருக்கவேண்டுமென நாங்கள் ஞாபகப்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் ஏதாவது பிரச்சினையையோ அல்லது புனைகதையையோ உருவாக்கி மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்து வருகிறார்கள்.
எங்கள் அரசாங்கம் மூன்றே மாதங்களில், ஆறே மாதங்களில் வீழ்ந்துவிடுமென கூறவும் தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் இந்த நாட்டை சீராக்கியே தீருவோமென்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அதனை சாதிக்காமல் தேசிய மக்கள் சக்தி நின்றுவிடப் போவதில்லை.