நாடாளுமன்றத் தேர்தலில் 113 என்ற சாதாரண பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போனால் கூட்டணி ஆட்சியை அமைப்பது குறித்து தேசிய மக்கள் சக்தி ப...
நாடாளுமன்றத் தேர்தலில் 113 என்ற சாதாரண பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போனால் கூட்டணி ஆட்சியை அமைப்பது குறித்து தேசிய மக்கள் சக்தி பேச்சுகளை நடத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரதானக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும், சுயேச்சை குழுக்களும் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைய உள்ளதுடன், 12 மற்றும் 13ஆம் திகதிகளில் எந்தவொரு வேட்பாளரும், கட்சியும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியை அமைதிக் காலப்பகுதியாக கருதி அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் சில மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் பல மாவட்டங்களில் சுமூகமான நிலையில் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலை போன்று பொதுத் தேர்தலில் பிரச்சாரங்கள் தீவிரமாக இல்லையென பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தேர்தலில் 113 என்ற சாதாரண பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போனால் கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான ரகசிய பேச்சுகளை தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
ரகசியமான முறையில் இந்தப் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பின் அழைப்பை தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சாதகமான முறையில் அணுகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
என்றாலும், ஏனைய கட்சிகளின் ஆதரவு தமது தரப்புக்கு தேவைப்படாதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பொன்றில் கூறியிருந்தார். தேசிய மக்கள் சக்தியால் 113 என்ற சாதாரண பெரும்பான்மையை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் விடுதலை முன்னணியை போல் இல்லாது சற்று மெத்தனமாக போக்கில் இருப்பதால் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113 இடங்களுக்கு மேல் பெறும் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியும். வரவு - செலவுத் திட்டம், இடைக்கால கணக்குகள் உட்பட சில சட்டங்களை நிறைவேற்றவும் மறுசீரமைக்கவும் சாதாரண பெரும்பான்மை போதுமானது. ஆனால், அரசியலமைப்புத் திருத்தங்களைச் செயல்படுத்துவது போன்ற சிறப்பு நோக்கங்களுக்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.
1994ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட அரசாங்கங்கள் அமைந்தன. 2005 இற்கும் 2015 இற்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இயங்கியது.
மகிந்த ராஜபக்சவுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்துக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், அவரது அரசாங்கம் 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகள் மாத்திரமே இயங்கியது.
தேசிய மக்கள் சக்தி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாக உள்ளதால் பொதுத் தேர்தலில் பின்னர் பல கட்சிகளை இணைத்துக்கொண்டு பயணிப்பதற்கான முயற்சிகள் தேர்தலுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.