கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான சாலைகள் இல்லை. அங்கே மதுபான சாலைகளை திறக்க வேண்டும் என கோரியவர் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சி. சிறிதரன் என ய...
கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான சாலைகள் இல்லை. அங்கே மதுபான சாலைகளை திறக்க வேண்டும் என கோரியவர் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சி. சிறிதரன் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசு கட்சியில் உள்ள நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மதுபான சாலைக்கான அனுமதியினை பெற்றுக்கொண்டுள்ளார். அதனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என சுமந்திரன் கூறியுள்ளார்.
அதே போல தான் சி.வி விக்னேஸ்வரன் ஐயாவும் மதுபான சாலை அனுமதிக்கான சிபாரிசு கடிதத்தை வழங்கி இருந்தார் அவரும் தேர்தலில் போட்டியிடவில்லை.
அதேவேளை விக்னேஸ்வரன் ஐயா வாழ்வாதாரத்திற்காக மதுபான சாலை அனுமதியினை வழங்கினேன். என கூறியது முற்றிலும் பொய்.அவர் அவ்வாறு கூறியிருக்கவில்லை.
அதேபோன்று விக்னேஸ்வரன் ஐயா சிபாரிசு கடிதத்தை விற்றவர் அல்ல. ஆனால் வீட்டு சின்னத்தில் உள்ளவரின் தொழிலே வர்த்தகம் தான் அவர் ஒரு வியாபாரி. அவர் சில வேளை சிபாரிசு கடிதத்தை விற்று இருக்கலாம்.
அதேவேளை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிறிதரன் சாராய பார் திறக்க வேண்டும் என பகிரங்கமாக கோரி இருந்தார்.
அதனால் மதுபான சாலை அனுமதி போன்ற விடயங்களை விட்டு விட்டு கடந்த காலங்களில் நாங்கள் என்ன செய்தோம். இனி என்ன செய்ய போறோம் என மக்களுக்கு சொல்லட்டும்.
தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் நாங்கள் எந்த ஊழல் நடவடிக்கையிலும் ஈடுபட்டவர்கள் இல்லை. தமிழ் மக்கள் ஏமாற்றியவர்கள் இல்லை.
தங்களுடைய உட்கட்சி பூசல்களை தீர்க்க முடியாதவர்கள். தமிழினத்திற்கு எவ்வாறு தீர்வினை பெற்று தர போகின்றார்கள்? எனவே கட்சி பிரச்சனையையும் , இனபிரச்சனையையும் தீர்க்க இலாய்க்கற்றவர்கள்.
மான்கள் வேகமாக ஓட கூடியது நாங்களும் மான்கள் போன்றே பாய்ந்து ஓடுவோம் என மேலும் தெரிவித்தார்.