யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களை...
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையை இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் , நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் , இளைஞனை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது , எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , அவற்றின் அடிப்படையிலும் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 20 வரையில் அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் , அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.